சூர்ப்பணகை மீண்டும் வற்புறுத்தல் 2869. | 'கொல்லலாம்; மாயங்கள் குறித்தனவே கொள்ளலாம்; கொற்ற முற்ற வெல்லலாம்; அவர் இயற்றும் வினை எல்லாம் கடக்கலாம்;-மேல் வாய் நீங்கி, பல் எலாம் உறத் தோன்றும் பகு வாயள்" என்னாது, பார்த்தி ஆயின், நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட! கேள்' என்று, நிருதி கூறும்: |
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட - நெல் முதலிய பொருள்களை மிகுதியாக விளைத்தளிக்கும் நீர்வளமுள்ள கோசல நாட்டவனே; கேள் - கேட்பாயாக; மேல்வாய் நீங்கி(ப்) பல் எலாம் உறத் தோன்றும் பகுவாயள் என்னாது பார்த்தி ஆயின் - வாயின் மேற்புறம் அறுபட்டுப் பற்கள் எல்லாம் நன்றாக வெளிப்பட்ட பெரிய வாயினை உடையவள் என என்னை இகழாமல் கருணை கொண்டு அருள்புரிவாய் என்றால்; கொல்லலாம் - (அரக்கர்களையும் மற்றவர்களையும்) கொன்றுவிடலாம்; மாயங்கள் குறித்தனவே கொள்ளலாம் - அவர்களின் மாயச் செயல்களை முன்னதாக அறிந்து மேற்கொள்ளலாம்; கொற்ற முற்ற வெல்லலாம் - அரசுகள் அனைத்தும் வென்று ஆளலாம்; அவர் இயற்றும் வினை எல்லாம் கடக்கலாம் - அரக்கர் முதலியோர் செய்யும் வஞ்சனைச் செயல்களை வெல்லலாம்; என்று நிருதி கூறும் - என்று அரக்கியாம் சூர்ப்பணகை சொல்வாள். நாடு, நெல்வளம் சுரப்பது போல இராமன் தன் மீது அருள் புரிய வேண்டும் என்பது இதன் கருத்து ஆம். மேல்வாய் நீங்கி என்பதால் இலக்குவன் சூப்பணகையின் மூக்கை அறுத்த போது அவள் மேலுதடும் அறுபட்ட நிலை தெரியும். தன் அவல நிலையை இவ்வாறு கூறி இராமனின் கருணையைப் பெற நினைத்தாள். முன்னர்க் கூறிய இராமனின் சொற்கள் இவளிடம் எம்மாற்றத்தையும் உண்டாக்கவில்லை என இதனால் அறியலாம். அரக்கரை வெல்லத் தன்பால் இராமன் அருள் செய வேண்டும் என்பதை மேலும் வலியுறுத்துகிறாள். 138 |