2871. | ' "உளம் கோடல் உனை இழைத்தாள் உளள் ஒருத்தி" என்னுதியேல், நிருதரோடும் களம் கோடற்கு உரிய செருக் கண்ணியக்கால், ஒரு மூவேம் கலந்தகாலை, குளம் கோடும் என்று இதுவும் உறுகோளே? என்று உணரும் குறிக்கோள் இல்லா இளங்கோவோடு எனை இருத்தி, இரு கோளும் சிறை வைத்தாற்கு இளையேன்' என்றாள். |
உளம் கோடல் உனை இழைத்தாள் உளள் ஒருத்தி என்னுதியேல்- மனத்திலே உன்னை விரும்பிக் கணவனாகக் கொள்ளுதலைச் செய்த ஒருத்தி உன்னுடன் இருக்கிறாள் எனக் கூறு வாயானால்; நிருத ரோடும் களம் கோடற்கு உரிய செருக் கண்ணியக்கால் - அரக்கருடன் போர்க்களம் அடைவதற்குத் தக்க போரைக் கருதினால்; ஒரு மூவேம் கலந்த காலை - நீயும் உன் தம்பியும் நானும் ஆகிய நாம் மூவரும் சேர்ந்து அவர்களை எதிர்த்த போது; குளம் கோடும் என்று இதுவும் உறுகோளே - அப்போர்க் களத்தை குருதிக் குளமாக்கி வெற்றி கொள்வோம் என்பதும் நிறைவேறா நிகழ்ச்சியோ, என்று உணரும் குறிக்கோள் இல்லா - என அறியும் எல்லை குறித்த அறிவு இல்லாத; இளங்கோவோடு எனை இருத்தி - இலக்குவனாம் இளையவனுடன் என்னை வாழ வைப்பாய்; இரு கோளும் சிறை வைத்தாற்கு இளையேன் என்றாள் - சூரியன் சந்திரன் ஆகிய இரு கோள்களையும் சிறைப் பிடித்த இராவணன் தங்கையாகிய நான் எனக் கூறினாள். என்னுதி - என்று கூறுவாய், நிருதர் - அரக்கர், கண்ணுதல் - கருதுதல், மூவேம் - மூன்று பேராகிய நாம், உறுகோள் - நிகழ்ச்சி, சம்பவம் இளங்கோவுக்கு இளையாள் பொருத்தம் என்பதுமாம். இளையேன் - குறைவிலேன் என்றும் உரை காண்பர். முன்னது உடன்பாட்டுக் குறிப்பு வினையாலணையும் பெயர்; பின்னது எதிர் மறைத் தெரிநிலை முற்று. 140 |