சூர்ப்பணகை அவர்களை அச்சுறுத்தி அகலுதல் 2873. | என்றவள்மேல், இளையவன்தான், இலங்கு இலை வேல் கடைக்கணியா, 'இவளை ஈண்டு கொன்று களையேம்என்றால், நெடிது அலைக்கும்; அருள் என்கொல்? கோவே!' என்ன, 'நன்று, அதுவே ஆம் அன்றோ? போகாளேல் ஆக!' என நாதன் கூற, 'ஒன்றும் இவர் எனக்கு இரங்கார்; உயிர் இழப்பென், நிற்கின்' என, அரக்கி உன்னா. |
என்றவள்மேல் - என்று கூறிய சூர்ப்பணகையின் மேல்; இளையவன் தான் இலங்கு இலை வேல் கடைக் கணியா - இலக்குவன் விளங்குகின்ற இலை வடிவிலுள்ள வேலைக் கடைக் கண்ணால் பார்த்து; இவளை ஈண்டு கொன்று களையேம் என்றால் நெடிது அலைக்கும் - இந்த அரக்கியை இவ்விடத்தில் கொன்று ஒழித்திடவில்லை எனின் மிகவும் வருத்துவாள்; அருள்என் கொல் கோவே என்ன - (உன்) கட்டளை எதுவோ தலைவா! என்று கேட்க; நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல் ஆக என நாதன் கூற - நற்செயல் நீ கூறியதே ஆகும் அல்லவா அவ்வாறு அவள் போகாவிடில் அவ்வாறே செய்க என்று தலைவனாம் இராமன் சொல்ல; எனக்கு ஒன்றும் இவர் இரங்கார் நிற்கின் உயிர் இழப்பென் என அரக்கி உன்னா - என்னிடம் ஒரு வகையிலும் இவர்கள் அருள் செய்ய மாட்டார் இனி இங்கு நின்றால் என் உயிரை இழப்பேன் எனச் சூர்ப்பணகை எண்ணி; கடைக்கணியா - போர் செய்யும் போது வீரர் தம் போர்க் கருவியைப் பார்த்துக் கூறுதல், அது அவர்கள் அப்போர்க் கருவி கொண்டு செய்யும் போர்த் தொழிலையும் சுட்டும். அருள் என் கொல் - இடும் ஆணை எதுவோ? என எதிர் நோக்கிக் கேட்டது. இனி, இவ்வரக்கியிடம் இதுவரை அருள் காட்டுவதன் காரணம் எதுவோ என்றலுமாம். இருவர் உரையாடலும் அவர்தம் நிலையைக் காட்டும் நாடகத் திறம் புலப்பட அமைந்துளது. 142 |