சூர்ப்பணகை கரன்முன் விழுந்து முறையிடுதல் கலிவிருத்தம் 2875. | இருந்த மாக் கரன் தாள் இணையின் மிசை, சொரிந்த சோரியள், கூந்தலள், தூம்பு எனத் தெரிந்த மூக்கினள், வாயினள், செக்கர் மேல் விரிந்த மேகம் என விழுந்தாள் அரோ. |
சொரிந்த சோரியள் - பெருகுகின்ற இரத்தத்தையுடையவளும்; கூந்தலள் - (விரிந்த) தலைமயிரையுடையவளும்; தூம்பு எனத் தெரிந்த மூக்கினள் - மதகு போலத் துவாரங் கொண்ட மூக்கையுடையவளும்; வாயினள் - (அகன்ற) வாயையுடையவளுமாகிய சூர்ப்பணகை; மேல் செக்கர் விரிந்த மேகம் என - மேலே செவ்வானம் படர்ந்துள்ள மேகம் போல; இருந்த மாக்கரன் - (அவையில்) இருந்த பெருமை மிக்க கரனுடைய; தாள் இணையின் மிசை - இரண்டு கால்களின் மேலும்; வீழுந்தாள் - வீழ்ந்தாள். 'உங்களுக்குக் கூற்றுவனான கரனை இப்போதே கொண்டு வருகின்றேன்' என்று மூண்ட வயிரத்தோடு சென்ற சூர்ப்பணகை அறுபட்ட தன் உறுப்புக்களிலிருந்து இரத்தம் பெருக, விரித்த கூந்தலோடும் பெரிய வாயினாற் கதறிக் கொண்டு சபையில் வீற்றிருந்த கரனுடைய அடிகளில் வீழ்ந்தாள் என்பது. அவளது உடம்பில் பெருகும் இரத்தப் பெருக்கிற்கும், செம்பட்டை மயிர்க்கும் செவ்வானமும், கரிய உடம்புக்கு மேகமும் உவமைகளாயின. அரோ : ஈற்றசை; உவமையணி. 1 |