2876. | 'அழுங்கு நாள் இது' என்று, அந்தகன் ஆணையால் தழங்கு பேரி எனத் தனித்து ஏங்குவாள்; முழங்கு மேகம் இடித்த வெந் தீயினால் புழுங்கு நாகம் எனப் புரண்டாள் அரோ. |
அழுங்கு நாள் - (அந்த அரக்கர்கள்) அழியக் கூடிய நாள்; இது என்று - இதுவே என்று; அந்தகன் ஆணையால் - யமனுடைய கட்டளையால்; தழங்கு பேரி என - (அடிக்கப்பட்டு) ஒலிக்கின்ற பெரிய முரசு போல; தனித்து ஏங்குவாள் - தனியே (பேராரவாரம் உண்டாகுமாறு) கதறியழுபவளான சூர்ப்பணகை; முழங்கு மேகம் இடித்த - ஆரவாரிக்கின்ற மேகம் கக்கும்; வெந் தீயினால் - கொடிய நெருப்பாகிய இடியினால்; புழுங்கு நாகம் என - வெந்து துடிக்கின்ற பாம்பு போல; புரண்டாள் - (நிலத்திலே) புரண்டாள். சூர்ப்பணகை கதறியழுத குரலோசை அங்குள்ள கரன் முதலான அரக்கரை இராமனோடு உடனே போர் செய்ய எழுமாறு தூண்டி அவரனைவரும் அன்றே இறந்தொழிவதற்குக் காரணமாவது குறித்து அந்தக் கதறல் இராக்கத அழிவுக் குறிப்பாக யமன் அறைவித்த பறைபோலுமென்றது தன்மைத் தற்குறிப்பேற்றவணி. பின்னிரண்டடி; உவமையணி. இடிக்கு அழிதல் நாகத்தின் இயல்பு. அரோ - ஈற்றசை. 2 |