2877. | வாக்கிற்கு ஒக்க, புகை முந்து வாயினான் நோக்கி, 'கூசலர், நுன்னை இத் தன்மையை ஆக்கிப் போனவர் ஆர்கொல்?' என்றான்-அவள் மூக்கின் சோரி முழீஇக் கொண்ட கண்ணினான். |
அவள் மூக்கின் சோரி - அந்தச் சூர்ப்பணகையின் மூக்கிலிருந்து வடிந்த இரத்தத்தில்; முழீஇக் கொண்ட - மூழ்கடிக்கப்பட்ட; கண்ணினான் - கண்களையுடையவனும்; வாக்கிற்கு ஒக்க - (தன் வாயிலிருந்து பிறக்கும்) சொற்களுக்கு ஒத்தபடி; புகை முந்து வாயினான் - புகை முந்தி வெளிப்படுகின்ற வாயையுடையவனுமான கரன்; நோக்கி - (அந்தச்) சூர்ப்பணகையைப் பார்த்து; கூசலர் - கூச்சமில்லாதவர்களாய்; நுன்னை - உன்னை; இத் தன்மையை ஆக்கிப் போனவர் - இவ்வாறு அலங்கோலப்படுத்திச் சென்றவர்; ஆர் கொல் என்றான் - யார் என்று கேட்டான்; வாக்கிற்கு ஒக்க புகை - அவனது வாயிலிருந்து பின் வந்த பேச்சாகிய தீக்கு ஒப்ப, முன் எழுந்து வந்தது புகை. இன்னாரென்று அறியாததால் 'போனவர்' என்று பன்மையால் கூறினான்; துணியலாகாத இடத்துப் பன்மையால் கூறுதல் மரபு. முழீஇ - சொல்லிசையளபெடை. 3 |