| 2878. | 'இருவர் மானிடர்; தாபதர்; ஏந்திய வரி வில், வாள், கையர்; மன்மதன் மேனியர்; தரும நீரா; தயரதன் காதலர்; செருவில் நேரும் நிருதரைத் தேடுவார். |
இருவர் மானிடர் - (அதுகேட்ட சூர்ப்பணகை) இரண்டு மனிதர்கள்; தாபதர் - தவ வேடத்திலிருக்கும் முனிவர்கள்; ஏந்திய வரிவில் வாள் கையர் - தரித்த கட்டமைந்த வில்லும் வாளுமுடைய கையினர்; மன்மதன் மேனியர்- மன்மதனைப் போன்ற அழகான வடிவுடையவர்கள்; தரும நீரர்- தருமநெறியில் நடப்பவர்கள்; தயரதன் காதலர் - தசரதச் சக்கரவர்த்தியின் மைந்தர்கள்; செருவில் நேரும் - போரில் எதிர்ப்படும்; நிருதரைத் தேடுவார் - அரக்கர்களைத் தேடித் திரிந்து கொண்டிருப்பவர்; மரவுரியுடுத்தமையும் சடைமுடி தரித்தமையும் பற்றித் 'தாபதர்' என்றாள். தரும நீரர் - இராமலக்குவரின் பேரழகும், பெருங்குணமும் விளங்கும். 4 |