2880.'மண்ணில், நோக்க அரு
     வானினில், மற்றினில்,
எண்ணி நோக்குறின்,
     யாவரும் நேர்கிலாப்
பெண்ணின் நோக்குடையாள்
     ஒரு பேதை, என்
கண்ணின் நோக்கி உரைப்ப
     அருங் காட்சியாள்;

     ஒரு பேதை - (அவர்களோடு உள்ள) ஓர் இளம் பெண்; மண்ணில்-
இவ்வுலகத்திலும்; நோக்க அரு வானினில் - எளிதாகக் காண முடியாத
மேலுலகத்திலும்; மற்றினில் - (இந்த மண், வானம் அல்லாத)
பாதாளத்திலும்; எண்ணி நோக்குறின் - (இவளுக்கு ஒப்பாவார் யாரென்று)
கருதிப் பார்க்குமிடத்து; யாவரும் நேர்கிலா - ஒருவரும் ஒப்புமை
ஆகமாட்டாத; பெண்ணின் நோக்கு உடையாள் - பெண்ணழகு முழுவதும்
உடையவள்; என் கண்ணின் நோக்கி - என் கண்களால் பார்த்து;
உரைப்ப அருங்காட்சியாள் - வாயால் எடுத்துச் சொல்லமுடியாத அரிய
தோற்றமுடையவள்.

     சீதையின் அழகு மிகுதியும், எவ்வளவு காணினும் முற்றும் காண
முடியாத கட்டழகின் மிகுதியும், அவ் விரண்டும் வாயினால் எடுத்துச்
சொல்லமுடியாத தன்மையும் ஈற்றடியில் புலப்படும்.

     நோக்கு: அழகு - 'நோயிகந்து நோக்கு விளங்க' - (மதுரைக்: 13)
மற்றினில்: இடைச்சொல் உருபேற்று வந்தது.                        6