கரன் கொதித்து எழுதல் | 2882. | கேட்டனன் உரை; கண்டனன் கண்ணினால், தோட்ட நுங்கின் தொளை உறு மூக்கினை; 'காட்டு' எனா, எழுந்தான், எதிர் கண்டவர் நாட்டம் தீய : - உலகை நடுக்குவான். |
எதிர் கண்டவர் நாட்டம் தீய - (தன்னை எதிரில்) பார்த்தவர்களின் கண்கள் கருகிப் போய்விடும்படி; உலகை நடுக்குவான் - உலகத்து உயிர்களை நடுங்கச் செய்பவனான கரன்; உரை கேட்டனன் - சூர்ப்பணகை சொன்ன வார்த்தைகளைக் கேட்டு; தோட்ட நுங்கின் - தோண்டியெடுக்கப்பட்ட பனை நுங்கைப் போல; தொளை உறு - துளை பொருந்திய; மூக்கினை - அவளது மூக்கை; கண்ணினால் கண்டனன் - (தன்) கண்களால் பார்த்து; காட்டு எனா எழுந்தான் - (உனக்கு இக் கெடுதி செய்தவரை எனக்குக்) காட்டு என்று சொல்லிக் கிளம்பினான். சூர்ப்பணகையின் மூக்கு அறுபட்டுத் துவாரங்கள் மட்டும் விளங்கிய முகத்தின் தோற்றம், நுங்கு தோண்டி எடுக்கப்பட்டபின் விளங்கும் பனங்காய் போன்றிருந்தது என்பது. நுங்கு மானிட உறுப்புக்கு ஒப்பு. (நாலடி. 44). பனங்காய் அந்த அரக்கியின் முகத்தின் வடிவத்திற்கும்; நிறத்திற்கும் மிக்க பொருத்தமான உவமை. 8 |