2883. | எழுந்து நின்று, உலகு ஏழும் எரிந்து உகப் பொழிந்த கோபக் கனல் உக, பொங்குவான்; ' "கழிந்து போயினர் மானிடர்" என்னுங்கால், அழிந்ததோ இவ் அரும் பழி?' என்னுமால். |
எழுந்து நின்று - (இவ்வாறு சொல்லி) எழுந்து நின்று; உலகு ஏழும் எரிந்து உக - ஏழுலகங்களும் எரிந்து பொடியாய்ச் சிதறும்படி; பொழிந்த கோபம் கனல் உக - (கண்கள்) சொரிந்த கோபத் தீ வெளியே சிந்த; பொங்குவான் - மனங் கொதிப்பவனான கரன்; மானிடர் கழிந்து போயினர் என்னுங்கால் - (இத் தீய செயல் செய்த) மனிதர்கள் (என்னால்) அழிந்து விட்டார்கள் என்னும் மாத்திரத்தில்; இவ் அரும் பழி - (நமக்கு உண்டான) இந்த அரிய பழி; அழிந்ததோ - தீர்ந்ததாக ஆகுமோ (ஆகாது); என்னும் - என்று சொன்னான். தான் இப்பொழுது இராமலக்குவர்களை எதிர்த்து அழிப்பது உறுதியென்பதும், அப்படி அவர்களை அழித்தாலும் அரக்கர் சமூகத்திற்கு அந்த மானிடரால் உண்டான பழி அழியாது என்பது கரன் கொண்ட கருத்தாகும். உலகேழ் - மேலேழும் கீழேழுமாகிய பதினான்கு உலகங்கள். எழுந்து நின்று பொங்குவான் என இயையும். ஆல் ஈற்றசை. 9 |