கரனை விலக்கி பதினான்கு வீரர்கள் போரிடச் செல்லுதல் 2884. | 'வருக, தேர்!' எனும் மாத்திரை, மாடுளோர், இரு கை மால் வரை ஏழினொடு ஏழ் அனார், ஒரு கையால் உலகு ஏந்தும் உரத்தினார், 'தருக இப் பணி எம்வயின் தான்' என்றார். |
(இவ்வாறு கூறிய கரன்) தேர் வருக எனும் மாத்திரை - எனது தேர் வரட்டும் என்று சொல்லிய அளவில்; மாடு உளோர் - அவன் பக்கத்தில் இருப்பவர்களும்; இரு கை மால்வரை ஏழினோடு ஏழ் அனார் - இரண்டு கைகளையுடைய பெரிய பதினான்கு மலைகளை ஒத்தவர்களும்; ஒரு கையால் - ஒவ்வொருவரும் தத்தம் ஒரு கையினாலே; உலகு ஏந்தும் உரத்தினார் - உலகம் முழுவதையும் தாங்கி ஏந்தும் வலிமையுள்ளவர்களுமான அவனுடைய படைத் தலைவர்கள் பதினால்வர்; இப்பணி - (கரனை நோக்கி) இப் பணியாகிய போர்த் தொழிலை; எம் வயின் தான் தருக - எங்களிடமே தந்தருளுக; என்றார் - என்று வேண்டினர். இரண்டு கைகளையுடைய பெருவலி படைத்த பதினால்வரான இவர்களின் வடிவம் உருவத்தாலும், வலிமையாலும் பெரிய மலை போல இருத்தலால் உவமானமாகிய மலைக்கு 'இருகை' என்ற அடைமொழி தந்தார் என்பது; இல்பொருளுவமை. மாடு: பக்கம்; மாத்திரை: கண்ணிமைக்கும் அல்லது கை நொடிக்கும் கால அளவு. கரனின் படைத் தலைவர் பதினான்கு பேர் என்பதை உணரலாம். தான் : பிரிநிலை. 10 |