2885. | சூலம், வாள், மழு, தோமரம், சக்கரம், கால பாசம், கதை, பொரும் கையினார்; வேலை ஞாலம் வெரு வுறும் ஆர்ப் பினார்; ஆல காலம் திரண்டன்ன ஆக்கை யார். |
(அந்த அரக்கர்கள்) சூலம் வாள் மழு தோமரம் சக்கரம் கால பாசம் கதை பொரும் கையினார் - சூலம் முதல் கதை வரையுள்ள போர்ப் படைகளால் போர் செய்யும் கைகளையுடையவர்கள்; வேலை ஞாலம் - கடல் சூழ்ந்த இவ்வுலகத்து உயிர்கள் யாவும்; வெருவுறும் ஆர்ப்பினார் - அஞ்சத்தக்க ஆரவாரம் உடையவர்கள்; ஆலகாலம் திரண்டன்ன - ஆலகாலம் என்ற நஞ்சு உருவெடுத்து வந்தாற்போன்ற; ஆக்கையார் - உடலையுடையவர்கள். கையினார், ஆர்ப்பினார், ஆக்கையார் 'ஏழினோடு ஏழனார்' என்ற அடைமொழியோடு (2884) கூட்டுக. சூலம் - முத்தலைவேல்; மழு - கோடரி; தோமரம் - இரும்புலக்கை; காலபாசம் - கயிற்றாலான ஒரு போர்க்கருவி; கதை - தண்டாயுதம் ஆலகாலம் - கரிய நிறத்திற்கும் கொடுஞ்செயலுக்கு உவமை. ஞாலம் - ஆகுபெயர். 11 |