2886.வெம்பு கோபக்
     கனலர் விலக்கினார்,
'நம்பி! எம் அடிமைத்
     தொழில் நன்று' எனா,
'உம்பர்மேல் இன்று
     உருத்தனை போதியோ?
இம்பர்மேல் இனி யாம்
     உளெமோ?' என்றார்,

    வெம்பு கோபக் கனலர் - கொதிக்கின்ற கோபத் தீயையுடைய அந்த
அரக்கர்கள்; (கரனை நோக்கி) நம்பி - சிறந்த தலைவனே!; எம்
அடிமைத் தொழில் நன்று -
எங்களது அடிமைத் தொழில் நன்றாக
இருந்தது; எனா - என்று தம்மை இகழ்ந்தவர்களாய்; இன்று உம் பர்மேல்
-
இப்பொழுது தேவர்கள் மேல்; உருத்தனை போதியோ - கோபித்துப்
போர் செய்யப் போகிறாயோ (அப்படி இல்லையே இவ்வாறு நீ மனிதரோடு
போருக்குச் சென்றால்); இனி இம்பர்மேல் - இனி இந்தவுலகத்தில்; யாம்
உளெமோ -
நாங்கள் உயிரோடு வாழ்பவர்களாவேமோ?; - என்றார்
விலக்கினார் -
என்று சொல்லி (க்கரனைப் போருக்குச் செல்லாதபடி)
தடுத்தார்கள்.

     'எம் அடிமைத் தொழில் நன்று' - நாங்கள் உனக்கு அடியவர்களாய்
நீ இட்ட கட்டளையை ஏற்றுச் செய்வதற்குப் பணியாளராகக் காத்திருக்க, நீ
எங்களுக்கு எந்தவிதக் கட்டளையுமிடாமல் நேரே போருக்குச் சென்றால்
எங்கள் அடிமைத் திறம் என்ன பயனைத் தரும்? என்பது; இகழ்ச்சிக்
குறிப்பு. நம்பி - அண்மை விளி.                                12