2888. என்னலோடும், விரும்பி
     இறைஞ்சினார்;
சொன்ன நாண்இலி
     அந்தகன் தூது என,
அன்னர் பின்
     படர்வார் என, ஆயினார்;
மன்னன் காதலர்
     வைகு இடம் நண்ணினார்.

    என்னலோடும் - என்று கரன் உத்தரவிட்ட அளவிலே; விரும்பி
இறைஞ்சினார் -
மகிழ்ச்சியோடு அவனை வணங்கி; சொன்ன நாண்
இலி-
இராமலக்குவர்களைப் பற்றிச் செய்தி கூறின வெட்கங் கெட்டவளான
சூர்ப்பணகையை; அந்தகன் தூது என - யமன் அனுப்பிய தூதாக
முன்னிட்டுக் கொண்டு; அன்னர் பின் படர்வார் என ஆயினார் -
அவள் பின்னே செல்பவராகி; மன்னன் காதலர் - தசரத மன்னனின்
குமாரர்கள்; வைகு இடம் நண்ணினார் - தங்கியிருந்த இடத்தைச்
சேர்ந்தார்கள்.

     சூர்ப்பணகை வழிகாட்டிக் கொண்டு முன்னே செல்ல அவளைத்
தொடர்ந்து பின்னே அரக்கர்கள் சென்றதற்கு, தம்மைப் பரலோகத்திற்கு
அழைத்துப் போதற்பொருட்டு யமன் அனுப்பிய தூதன் முன்னே செல்ல
பின்னே அவன் காட்டும் வழியிலே தொடர்ந்து செல்லுதலை
உவமையாக்கினார். தற்குறிப்பேற்றவணி.

     'சொன்ன நாண் இலி' என்பதைச் சொன்னம் நாண் இலி எனப் பிரித்து
சொர்ணமயமான மங்கல நாணில்லாத விதவையான சூர்ப்பணகையென்றும்
உரைக்கலாம்.

     நாணிலி என்றது அவள் வெட்கமில்லாமல் தகாத முறையில் காதல்
கொண்டது குறித்தும், அவர்கள் தனக்கு இழைத்த கேட்டையும்
அவமானத்தையும் கருதாமல் பெண்களுக்குரிய நாணமின்றி அவர்களைப்
புகழ்ந்து பாராட்டியதைக் கருதியும் கூறியது.                       14