சூர்ப்பணகை இராமனைச் சுட்டிக் காட்டுதல் 2889. | துமிலப் போர் வல் அரக்கர்க்குச் சுட்டினாள், அமலத் தொல் பெயர் ஆயிரத்து ஆழியான் நிமலப் பாத நினைவில் இருந்த அக் கமலக் கண்ணனை, கையினில் காட்டினாள். |
அமலத் தொல் பெயர் ஆயிரத்து - குற்றமற்ற பழமை வாய்ந்த ஆயிரந் திருநாமங்களையுடைய; ஆழியான் - சக்கரப் படையேந்திய திருமாலின்; நிமலப் பாத நினைவில் இருந்த - குற்றமற்ற திருவடிகளைத் தியானித்த நிலையில் இருந்த; அக் கமலக் கண்ணனை - செந்தாமரை மலர் போன்ற கண்களையுடைய அந்த இராமனை; துமிலப் போர்வல் அரக்கர்க்கு - ஆரவாரத்தோடு போர் செய்வதில் வல்ல அந்த இராக்கதர்களுக்கு; கையினில் சுட்டினாள் காட்டினாள் - (சூர்ப்பணகை) தன் கையால் சுட்டிக் காண்பித்தாள். ஆழியான் - சக்கராயுதம் கொண்ட திருமால்; இங்கே அரங்கநாதன் : இராமன் குல தெய்வம். இராமன் அரங்கநாதனைத் தியானித்து வணங்கினான். 'கோதறு தவத்துத் தம்குலத்துளோர் தொழும், ஆதியஞ் சோதியை அடி வணங்கினான்' (1208) - ஐயனும் அச்சொற் கேளா ஆயிரம் மௌலியானைக் கைதொழுது' - (1576) என்று கூறப்பட்டுள்ள செய்திகளையும் 'பணி அரங்கப் பெரும்பாயற் பரஞ்சுடரை யாம் காண, அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார் (638) என்று கூறப்பட்டுள்ள செய்தியையும் இணைத்து நோக்கினால், இராமன் வழிபட்டது அரங்கநாதப் பெருமானையே என்பது தெளிவாகும். அமலப் பெயர் : தன்னை உச்சரித்தவரின் கருமங்களையொழிக்கும் திருநாமம். துமிலம் : பேராரவாரம், போர்க்குழப்பம். இப்பாடல் இராமனின் தவநிலையையும் அரக்கரின் அவநிலையையும் ஒரு மிக்கக் கூறியவாறு காணலாம். 15 |