இராமன் போருக்கு எழுதல்

2891. ஏத்து வாய்மை
     இராமன், இளவலை,
'காத்தி தையலை' என்று,
     தன் கற்பகம்
பூத்தது அன்ன பொரு
     இல் தடக் கையால்,
ஆத்த நாணின் அரு
     வரை வாங்கினான்.

    ஏத்து வாய்மை இராமன் - யாவரும் புகழ்ந்து கொண்டாடும்
சத்தியத்தையுடைய இராமன்; இளவலை - தம்பியான இலக்குவனை
(நோக்கி); தையலை(க்) காத்தி என்று - தேவியாகிய சீதையை நீ
பாதுகாத்துக் கொண்டிரு என்று கூறி; பூத்தது கற்பகம் அன்ன - பொலிவு
பெற்ற கற்பக மரம் போன்ற; பொருவு இல் - வேறு ஒப்பில்லாத; தன்
தடக் கையால் -
தன்னுடைய பெரிய கையினால்; ஆத்த நாணின் -
கட்டப்பட்ட நாண்கயிற்றையுடைய; அருவரை வாங்கினான் -
அழித்தற்கரிய மலை போன்ற வில்லை எடுத்துக் கொண்டான்.

     ஏத்து வாய்மை இராமன் - தண்டகாரணியத்தில் வசிக்கும் முனிவர்கள்
அரக்கர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் தன்னைச் சரணடைந்த
பொழுது அவர்களுக்கு இராமன் அந்த அரக்கர்களையெல்லாம்
வேரறுப்பதாக வாக்குறுதி தந்திருந்ததைப் பழுதுபடாதவாறு நிறைவேற்றத்
தொடங்கினான் என்பது.

     ஆத்த - யாத்த: மரூஉ; வரை - உவமையாகுபெயர்.           17