அரக்க வீரர் மடிய, சூர்ப்பணகை கரனிடம் ஓடுதல்

2893.மழுவும், வாளும், வயங்கு
     ஒளி முச் சிகைக்
கழுவும், கால வெந் தீ
     அன்ன காட்சியார்,
எழுவின் நீள் தடக்
     கை எழு நான்கையும்,
தழுவும் வாளிகளால், தலம்
     சார்த் தினான்.

    கால வெந் தீ அன்ன - கொடிய ஊழிக் காலத்துத் தீயைப் போன்ற;
காட்சியார் - தோற்றத்தையுடையவர்களாகிய அந்த அரக்கர்களின்;
மழுவும் - மழுவென்னும் ஆயுதத்தையும்; வாளும் - வாள்களையும்;
வயங்கு ஒளி - விளங்குகின்ற ஒளியுடைய; முச் சிகைக் கழுவும் -
முத்தலைகளையுடைய சூலங்களையும்; எழுவின் நீள் தடக்கை
எழுநான்கையும் -
(இவ்வாறான படைக்கலங்களை ஏந்திய) - தூண்களைப்
போன்று நீண்ட பெரிய கைகள் இருபத்தெட்டையும்; தழுவும் வாளிகளால்
-
குறி தவறாமல் தாக்கும் அம்புகளால்; தலம் சார்த்தினான் - துணித்துத்
தரையில் வீழ்த்தினான்.

     அப் பதினான்கு அரக்க வீரர்களின் கைகளையும் இராமன் தன்
அம்புகளால் துண்டித்துத் தரையிலே தள்ளினான் என்பதாம். போரின்
தொடக்கத்திலேயே பதினான்கு அரக்கர்களும் தம் படைகளுடன் கைகளை
இழந்தனர் என்பது.                                          19