2894. மரங்கள்போல், நெடு
     வாளொடு தோள் விழ,
உரங்களான் அடர்ந்தார்;
     உரவோன் விடும்
சரங்கள் ஓடின
     தைக்க, அரக்கர்தம்
சிரங்கள் ஓடின;
     தீயவள் ஓடினாள்.

    நெடு வாளொடு - நீண்ட வாள்களோடு; தோள் - தங்கள்
தோள்கள்; மரங்கள்போல் விழ - மரங்கள் வெட்டப்பட்டுக் கீழே விழுவது
போலத் துணிபட்டு வீழ்ந்தபின்பும்; உரங்களான் அடர்ந்தார் -
(பொருட்படுத்தாமல் மேலும்) அந்தப் படைத் தலைவர்கள் மார்பின் வலிமை
கொண்டு தாக்கிப் போர் செய்தனர்; உரவோன் விடும் சரங்கள் -
வலிமையுள்ள இராமன் அவர்கள்மேல் எய்த அம்புகள்; ஓடின தைக்க -
விரைவாகச் சென்று பாய்தலால்; அரக்கர்தம் சிரங்கள் -
அவ்வரக்கர்களுடைய தலைகள்;  ஓடின - அறுபட்டு அப்பால் விழுந்தன;
தீயவள் ஓடினாள் - (அதுகண்டு) கொடியவளான சூர்ப்பணகையும் அஞ்சி
ஓடலுற்றாள்.

     அந்தப் படைத் தலைவர் பதினால்வரின் கைகளும் பிடித்த படைக்
கருவிகளோடு அற்றுக் கீழே விழுந்திடவும் அவர்கள் சலியாமல் நின்று தம்
மார்பு வலிமையால் போர் செய்ய, அப்போது இராமனின் அம்புகள்
விரைந்து சென்று தைக்க அவர்களின் தலைகள் அறுபட்டு வீழ்ந்தன
என்பது. வாள் - இங்கே படைக் கருவிகளின் பொதுவைக் குறித்தது.
சரங்கள் ஓடின, சிரங்கள் ஓடின, தீயவள் ஓடினாள் என்ற அடுக்கு
விரைவில் உண்டான ஏக கால நிகழ்ச்சிகளின் குறிப்பை உணர்த்தியது.   20