2896.'அங்கு அரக்கர் அவிந்து
     அழிந்தார்' என,
பொங்கு அரத்தம் விழிவழிப்
     போந்து உக,
வெங் கரப் பெயரோன்,
     வெகுண்டான், விடைச்
சங்கரற்கும் தடுப்பு
     அருந் தன்மையான்.

    விடைச் சங்கரற்கும் - காளை வாகனத்தையுடைய (அழித்தற்
கடவுளான) சிவபிரானுக்கும்; தடுப்பு அரும் தன்மையான் - தடுக்க
முடியாத வீரத்தன்மையுடையவனான; வெங் கரப் பெயரோன் - கொடிய
கரனென்னும் பெயரையுடைய அந்த அரக்கன்; அங்கு அரக்கர் அவிந்து
அழிந்தார் என -
தான் அனுப்பிய படைத் தலைவர்கள் இறந்தொழிந்தனர்
என்று (சூர்ப்பணகை) சொல்ல (க் கேட்டு); பொங்கு அரத்தம் -
உள்ளிருந்து பொங்குகின்ற இரத்தம்; விழிவழிப் போந்து உக - தன்
கண்களின் வழியாக வெளியே சிந்த; வெகுண்டான் - கோபங்
கொண்டான்.

     சங்கரனுக்கும் - உம்மை உயர்வு சிறப்பினது. ரத்தம் என்பதனோடு
அகர உயிர் முதலில் வந்து அரத்தம் என்றாயிற்று.                  22