2897. | 'அழை, என் தேர்; எனக்கு ஆக்கு, வெம் போர்ப் படை; உழையர் ஓடி, ஒரு நொடி ஓங்கல்மேல், மழையின், மா முரசு எற்றுதிர், வல்' என்றான்- முழையின், வாள் அரி அஞ்ச முழங்குவான். |
முழையின் வாள் அரி அஞ்ச முழங்குவான் - குகைக்குள் பதுங்கியிருக்கும் கொடிய சிங்கங்கள் அஞ்சும்படி முழக்கம் இடுபவனான கரன்; என் தேர் அழை - என் தேரை இங்கே அழையுங்கள்; வெம் போர்ப் படை எனக்கு ஆக்கு - எனக்கு வலிய போர் செய்வதற்குரிய படைக் கலங்களை ஆக்கு; வல் உழையர் ஓடி - விரைவில் ஏவலாட்கள் ஓடிச் சென்று; ஒரு நொடி ஓங்கல்மேல் - ஒரு நொடிக்குள்ளாக யானையின்மேல்; மழையின் - மேகம் அதிர்வது போல; மா முரசு எற்றுதிர் - பெரிய போர் முரசங்களை முழக்குங்கள்; என்றான் - என்று கட்டளையிட்டான். உழையர் - குற்றவேல் பணி செய்வோர். வெகுண்ட கரன் படைக்கலங்களையும் தேரையும் கொண்டு வருக, முரசை முழக்குக என்று கட்டளையிட, பக்கத்தில் இருந்தவர் ஓடிச் சென்று யானை மேல் முரசேற்றிப் பறையறைந்து அரக்கச் சேனை வருமாறு கரனது கட்டளையைத் தெரிவித்தனர் என்பது. ஓங்கல் - யானை: உவமவாகுபெயர். முரசு முழக்குக்கு மேக முழக்கு உவமையாம். 23 |