போர்ப் பறை கேட்டு, நான்குவகைப் படை எழுதல் 2898. | பேரி ஓசை பிறத்தலும், பெட்புறு மாரி மேகம் வரம்பு இல வந்தென, தேரின் சேனை திரண்டது; தேவர்தம் ஊரும், நாகர் உலகும் உலைந்தவே. |
பேரி ஓசை பிறத்தலும் - அவ்வாறு போர்ப் பறை முழங்கிய மாத்திரத்தில்; பெட்பு உறு - பெருமை மிக்க; மாரிமேகம் வரம்பு இல - மழைபொழியும் மேகங்கள் அளவில்லாதன; வந்து என - திரண்டு வந்தாற்போல; தேரின் சேனை - தேர்களையுடைய அரக்கச் சேனை; திரண்டது - ஒன்றாகத் திரண்டு வந்து கூடியது; தேவர் தம் ஊரும் - (அதனால்) தேவலோகம்; நாகர் உலகும் - நாகலோகமும்; உலைந்த - நிலைகுலைந்து வருந்தின. தீயோரை நலிந்து தங்களைப் பாதுகாக்கும் பொருட்டு அவதாரம் எடுத்துள்ள இராமபிரானுக்கு இதனால் என்னவாகுமோ என்று தேவர்களும், அளவற்ற சேனைகள் ஒருங்கு கூடியதனாலாகிய பார மிகுதியைத் தாங்க மாட்டாமல் பாதாளவுலகத்து நாக சாதியாரும் வருந்தினர் என்பது. சேனைகள் படைக்கலங்களைப் பொழிவதையும், பெருமுழக்கம் செய்வதையும், கரு நிறம் மிகுந்து இருப்பதையும் கருதி மாரி மேகத்தை உவமை கூறினார். அஃதாவது தேருக்கு - மேகம் நிறத்தாலும் உயர்ந்து விளங்கும் உருவாலும் ஒலியாலும் உவமை என்பது. ஏ - ஈற்றசை. 24 |