2899. | போர்ப் பெரும் பணை 'பொம்' என் முழக்கமா, நீர்த் தரங்கம் நெடுந் தடந் தோள்களா, ஆர்தது எழுந்தது - இறுதியில், ஆர் கலிக் கார்க் கருங் கடல் கால் கிளர்ந்தென்னவே. |
போர்ப் பெரும் பணை - போரினைத் தெரிவிக்கும் பெரிய முரசுகளின் ஓசை; பொம் என் முழக்கமா - பொம்மென்று ஒலிக்கின்ற ஆரவாரமாக இருக்க; நீர்த் தரங்கம் ஆ - கடல் நீரிலுள்ள அலைகளாக; நெடுந் தடத் தோள்கள் - நீண்ட பெரிய தோள்கள் இருக்க; இறுதி இல் ஆர் கலி கார்க் கருங்கடல் - முடிவே இல்லாத ஆரவாரத்தையும் மேகம் போன்ற கரு நிறத்தையுமுடைய கடல்; கால் கிளர்ந்து என்ன - ஊழிக் காற்றினால் பொங்கி மேலெழுந்தாற் போல; ஆர்த்து எழுந்தது - (அரக்கர் சேனை) ஆரவாரம் செய்து கொண்டு (போருக்கு) எழுந்தது. ஊழிக் காலத்தில் கிளர்ந்து பேராரவாரத்துடன் கடல் எழுவது போல அரக்கர் சேனை எழுந்தது என்பது தற்குறிப்பேற்றவணி. பொம்மென - ஒலிக் குறிப்பு. பணை - ஒலி : முதலாகுபெயர். ஏ - ஈற்றசை. சேனை கடல் என்றதற்கேற்ப அலைகள் தோள்களாகக் கூறப்பெற்றன. 25 |