2901. தறியின் நீங்கிய, தாழ்
     தடக் கைத் துணை,
குறிகொளா, மத வேழக்
     குழு அனார்,
செறியும் வாளொடு வாளிடை
     தேய்ந்து உகும்
பொறியின், கான் எங்கும்
     வெங் கனல் பொங்கவே.

    தறியின் நீங்கிய - (மதத்தால்) கட்டுத்தறியிலிருந்து
வெளிப்பட்டவையும்; குறிகொளா - (எவரையும்) ஒரு பொருட்டாக
மதியாதவையுமான; தாழ் தடக்கைத் துணை - தாழ்ந்து தொங்குகின்ற
பெரிய இரண்டு துதிக்கைகளையுடைய; மதவேழக் குழு அனார் - மதங்
கொண்ட யானைக் கூட்டத்தை ஒத்தவர்களாகிய அரக்கர்களின்; செறியும்
வாளொடு வாள் -
அடர்ந்த வாளாயுதங்கள் ஒன்றோடு ஒன்று; இடை
தேய்ந்து -
நடுவிலே உராய்தலால்; உகும் பொறியின் - வெளிச் சிந்தும்
தீப் பொறிகளால்; கான் எங்கும் - அந்த வனம் எங்கும்; வெம் கனல்
பொங்க -
கொடிய நெருப்பு ஓங்கியெழவும்; ஏ - ஈற்றசை.

     அரக்கப் படை வீரர்க்குத் தறியின் நீங்கிய தாழ் தடக்கைத் துணை
மத வேழங்கள் உவமையாம். இந்தப் பாடல், தேர்ப் படையைத் தொடர்ந்து
சென்ற அரக்கப் படை வீரர்களின் செறிவையும் அவர்கள் ஏந்திய
வாட்படைகளின் மிகுதியையும் விளக்கியது. தறி - தூண். தன்னைக்
கட்டியுள்ள தறியைக் கடுங்கோபத்தால் முறித்துத் தள்ளிவிட்டுத் தடையின்றி
வெளிச் செல்வது மதயானையின் இயல்பு.                           27