2902.முருடு இரண்டு முழங்குறத்
     தாக்கு ஒலி
உருள் திரண்டு எழும்
     தேர் ஒலியுள் புக,
அருள் திரண்ட அருக்கன்
     தன்மேல், அழன்று
இருள் திரண்டு வந்து
     ஈண்டியது என்னவே,

    இரண்டு - இரண்டு பக்கங்களிலும்; முருடு முழங்குற - முருடு
என்னும் போர்ப் பறை முழக்கம் உண்டாகும்படி; தாக்கு ஒலி -
அடிக்கப்படுதலாலாகிய ஓசை; உருள் திரண்டு எழும் - சக்கரங்கள் பல
ஒன்றாக உருளுவதால் உண்டாகும்; தேர் ஒலியுள் புக - தேர்களின்
ஆரவாரத்தினுள்ளே அடங்கவும்; அருள் திரண்ட - கருணையே
(ஓருருவாகத்) திரண்டு வடிவெடுத்தாற் போன்று விளங்கும்; அருக்கன்தன்
மேல் -
சூரியன்மேல்; அழன்று - கோபித்து; இருள் திரண்டு வந்து
ஈண்டியது என்ன -
இருளெல்லாம் ஒன்று சேர்ந்து நெருங்கியது
போலவும்.

     இராமனுக்குச் சூரியனையும், அவன்மேல் போருக்கு எழுந்து
நெருங்கிய அரக்கர் சேனைக்குச் சூரியன்மேல் வந்து நெருங்கிய இருளின்
தொகுதியையும் உவமை கூறியதால் கதிரவன்முன் இருள் போல
இராமபிரான்முன் அரக்கர்கள் எளிதில் அழியப் போவது பெறப்படும்.

     இருளையொழித்தல், மிக்க ஒளியைத் தருதல் ஆகிய செயல்கள்.
உலகிற்கு மிகப் பேருதவியாக இருப்பதால் அவனை 'அருள் திரண்ட
அருக்கன்' என்றார். சூரிய குலத்தவனான இராமனுக்குச் சூரியனும்,
கருநிறமுடைய அரக்கரின் கூட்டத்திற்கு இருளின் திரட்சியும் உவமையாக
நன்கு பொருந்தும். இரண்டு : எண்ணலளவையாகுபெயர். முருடு -
ஒருவகைப் பறை. மத்தளமும் ஆம்.                              28