2903. தலையில், மாசுணம்,
     தாங்கிய தாரணி
நிலை நிலாது, -
    முதுகை நெளிப்புற,
உலைவு இல் ஏழ்
     உலகத்தினும் ஓங்கிய
மலை எலாம், ஒரு
     மாடு தொக்கென்னவே.

    மாசுணம் தலையில் தாங்கிய - (ஆதிசேடன் முதலான) பாம்புகள்
தலைமேற் கொண்டு சுமக்கின்ற; தாரணி நிலை நிலாது - பூமி (மிகுதியான
பாரத்தைப் பொறுக்கமுடியாமல்) ஒரு நிலையில் நிற்க முடியாமல்; முதுகை
நெளிப்புற -
(தன்) முதுகை நெளிக்கும்படி; உலைவு இல் ஏழ்
உலகத்தினும் -
அழிவில்லாத ஏழுலகங்களிலும்; ஓங்கிய மலை எலாம் -
ஓங்கி வளர்ந்துள்ள மலைகள் யாவும்; ஒரு மாடு தொக்கு என்ன -
ஓரிடத்தில் வந்து சேர்ந்தாற் போலவும்; ஏ - ஈற்றசை.

     ஏழுலகத்து மலைகளும் ஒருங்கு திரண்டாற் போல அரக்கர்கள்
அந்தப் போர்க்களத்தில் ஒருங்கே திரண்டனர் என்பது -
தற்குறிப்பேற்றவணி.

     சராசரப் பொருள் அனைத்தையும் தரித்து நிற்பதால் பூமி தாரணி
எனப்பட்டது. தேர்ப்படை மலைகளின் தொகுதிக்கு உவமை; அவை
வலிமையும் பெருமையும் உயர்வும் பெற்றுள்ளமை பொதுத்தன்மை.

     'கார்க் கருங்கடல் கால் கிளர்ந்தென்ன' (2899), 'அலகையின் ஆட'
(2900), 'பொறியினிற் கானெங்கும் வெங்கனல் பொங்க' (2901), 'இருள்
திரண்டு வந்து ஈண்டிய தென்ன' (2902), 'மலையெலாம் ஒருமாடு வந்து
தொக்கென்ன' (2903), 'தேரின் சேனை திரண்டது' (2898) எனத் தொகுத்துப்
பொருள் முடிவு காண்க.                                       29