2906. ஏற்றுஇனம் ஆர்த்தன,
     ஏனம் ஆர்த்தன,
காற்றுஇனம் ஆர்த்தன,
     கழுதை ஆர்த்தன,
தோற்றின மாத்திரத்து
     உலகு சூழ்வரும்
பாற்றுஇனம் ஆர்த்தன,
     பணிலம் ஆர்த்தன.

    ஏற்று இனம் ஆர்த்தன - எருதுகளின் கூட்டம் கட்டப்பட்டவையும்;
ஏனம் ஆர்த்தன - பன்றிகள் கட்டப்பட்டவையும்; காற்று இனம்
ஆர்த்தன -
காற்று வடிவான பேய்க் கூட்டங்கள் கட்டப்பட்டவையும்;
கழுதை ஆர்த்தன - கழுதைகள் கட்டப்பட்டவையும்; பாற்றினம்
ஆர்த்தன -
பருந்து வகைகள் கட்டப்பட்டவையும்; தோற்றின மாத்திரத்து
-
மனத்தே எண்ணிய அளவிலே; உலகு சூழ்வரும் - உலகத்தைச் சுற்றி
வரும் தன்மையுள்ளனவும்; பணிலம் ஆர்த்தன - சங்குகள்
முழங்கினவுமான.

     இறுதியிலுள்ள ஆர்த்தன என்பது முற்று; மற்றவை பெயர்கள்.

     காற்று - பேய் : உலகவழக்கு பாறு - கழுகு, பருந்து. (பாறு + இனம்
= பாற்றினம்).                                               32