2907. | தேர்இனம் துவன்றின; சிறு கண் செம் முகக் கார்இனம் நெருங்கின; காலின், கால் வரு தார்இனம் குழுமின;-தடை இல் கூற்று எனப் பேர்இனம் கடல் எனப் பெயருங்காலையே. |
தேர் இனம் - தேர்களின் கூட்டங்கள்; துவன்றின - நெருங்கின; சிறுகண் செம்முகக் கார் இனம் - சிறிய கண்களையும் சிவந்த முகத்தையுமுடைய மேகங்களைப் போன்ற யானைக் கூட்டங்கள்; நெருங்கின - அடர்ந்தன; காலின் கால்வரு - காற்றைப் போலக் கால்களால் விரைந்து ஓடி வரும்; தார் இனம் - குதிரைப் படைகளின் கூட்டங்கள்; குழுமின - திரண்டன; தடை இல் கூற்று என - தடுக்கப் படாத யமனைப் போல; பேர் இனம் - பெரிய அரக்கராகிய காலாட் படை; கடல் என - கடல் போல; பெயரும் காலை - செல்லும் பொழுதில்; ஏ - ஈற்றசை. கார் - உவமவாகுபெயர் : யானை என்பது விளங்கச் 'சிறுகண் செம்முகக் கார்' என்றார் சிறிய கண்களும் செம்புள்ளிகளும் உத்தம யானைக்கு இலக்கணமாம். தார் : குதிரைச் சேனை. துவன்றின், நெருங்கிய, குழுமின என்பவற்றில் ஒரு பொருளே மீண்டும் வந்ததால் பொருட் பின்வரு நிலையணியாம். முன்னே காலாட்படை பெயரத் தேர், யானை, குதிரை என்னும் முப்படைகளும் பின்னே பெயர்த்தன என்பது கூறப்பட்டது. தார் - கிண்கிணிமாலை. அதனைப் பூண்ட குதிரை என்க. 33 |