கரன் படையினர் ஏந்திய போர்க் கருவிகள் 2908. | மழுக்களும், அயில்களும், வயிர வாள்களும், எழுக்களும், தோமரத் தொகையும், ஈட்டியும், முழுக் கலும், முசுண்டியும், தண்டும், முத் தலைக் கழுக்களும், உலக்கையும், கால பாசமும். |
மழுக்களும் - எரியிரும்பு ஆயுதங்களும்; அயில்களும் - வேற்படைகளும்; வயிர வாள்களும் - உறுதியான வாட் படைகளும்; எழுக்களும் - குத்துக் கோல்களும்; தோமரத் தொகையும் - ஏறியீட்டிகளின் தொகுதியும்; ஈட்டியும் - பெரிய ஈட்டிகளும்; முழுக்கலும் - முழுக் கற்களான கவண் கற்களும்; முசுண்டியும் - முசுண்டியென்னும் சிறுவாள்களும்; தண்டும் - தண்டாயுதமாகிய கதைகளும்; முத்தலை கழுக்களும் - மூன்று தலைகளையுடைய சூலங்களும்; உலக்கையும் - உலக்கைகளும்; கால பாசமும் - கால பாசமாகிய சுருக்குக் கயிறுகளும். முசுண்டி - சிறுவாள் 2908, 2909, 2910 ஆகிய மூன்று செய்யுட்கள் படையினர் எடுத்துச் சென்ற படைக் கருவிகளைக் கூறும். 34 |