2909. | குந்தமும், குலிசமும், கோலும், பாலமும், அந்தம் இல் சாபமும், சரமும், ஆழியும், வெந் தொழில் வலயமும், விளங்கு சங்கமும் பந்தமும், கப்பணப் படையும், பாசமும், |
குந்தமும் - சிறிய ஈட்டிகளும்; குலிசமும் - வச்சிரப் படைகளும்; கோலும் - தடிகளும்; பாலமும் - பிண்டிபாலமென்னும் முறுக்குத் தடிகளும்; அந்தம் இல் சாபமும் - அளவில்லாத விற்களும்; சரமும் - அம்புகளும்; ஆழியும் - சக்கரப் படைகளும்; வெந் தொழில் வலயமும் - கொடிய தொழிலையுடைய வளையங்களும்; விளங்கு சங்கமும் - வெண்ணிறமாக விளங்கும் சங்குகளும்; பந்தமும் - தீப் பந்தங்களும்; கப்பணப் படையும் - கப்பணமென்னும் ஆயுதங்களும்; பாசமும் - கயிறுகளும்-; தனது பெருமுழக்கத்தால் பகைவரை அஞ்சச் செய்து அழித்தலால் சங்கும் ஆயுதத்தின் பால் சேரும். திருமாலின் ஐந்து படைகளுள் பாஞ்சசன்னியம் என்ற சங்கும் ஒன்றாதலை அறியலாம். கப்பணம் - இரும்பால் யானை நெருஞ்சிமுள் வடிவில் செய்த கருவி. 35 |