2910. | ஆதியின், அருக்கனும் அனலும் அஞ்சுறும் சோதிய, சோரியும் தூவும் துன்னிய,- ஏதிகள் மிடைந்தன, - இமையவர்க்கு எலாம் வேதனை கொடுத்தன, வாகை வேய்ந்தன. |
ஆதியின் - (மழு முதலாகப் பாசம் ஈறாக முன் சொன்னவை) முதலாகவுள்ள; அருக்கனும் அனலும் - சூரியனும் அக்கினியும்; அஞ்சுறும் சோதிய - அஞ்சத்தக்க ஒளியுடையனவும்; சோரியும் தூவும் துன்னிய - (பகைவரின்) இரத்தமும் மாமிசமும் நிறைந்து பொருந்தினவையும்; இமையவர்க்கு எலாம் - தேவர்களுக்கெல்லாம்; வேதனை கொடுத்தன - (முன்னைய போர்களில்) துன்பந் தந்தவையும்; வாகை வேய்ந்தன - (வெற்றிக்கு அடையாளமான) வாகைப் பூமாலை சூடிய வையுமாகிய; ஏதிகள் மிடைந்தன - ஆயுதங்கள் நெருங்கி விளங்கின. தூ - தசை. வாகை - இருமடியாகுபெயர். சோரியும் தூவும் துன்னியது- முன்பு தேவர்களுடன் செய்த போர்களில் தாக்கிப் பகைவரின் இரத்தத்தையும், அவரது உடலின் மாமிசத்தையும் கொண்டமை. ஆதியின் - ஏதிகள் என இயையும். 36 |