தானைத் தலைவரும் சேனை வீரரும் 2911. | ஆயிரம் ஆயிரம் களிற்றின் ஆற்றலர்; மா இரு ஞாலத்தை விழுங்கும் வாயினர்; தீ எரி விழியினர்; - நிருதர் சேனையின் நாயகர், பதின்மரோடு அடுத்த நால்வரே. |
ஆயிரம் ஆயிரம் களிற்றின் ஆற்றலர் - பல ஆயிரக்கணக்கான யானைகளின் வலிமையுடையவர்களும்; மா இரு ஞாலத்தை - மிகப் பெரிய உலகத்தையே; விழுங்கும் வாயினர் - விழுங்கக் கூடிய பெரிய வாயையுடையவர்களும்; தீ எரி விழியினர் - நெருப்பு மூண்டெழுகின்ற கண்களையுடையவர்களும் ஆகிய; பதின்மரோடு அடுத்த நால்வர் நிருதர்- பதினான்கு அரக்க வீரர்கள்; சேனையின் நாயகர் - அச் சேனைக்குத் தலைவர்களாவார்கள்; ஏ - ஈற்றசை. 'மாயிரு ...... வாயினர்' - உயர்வு நவிற்சியணி மற்றவை - தன்மை நவிற்சியணி. இங்கே கூறிய படைத்தலைவர், முன்பு இராமனது அம்பால் இறந்த (2894) படைத் தலைவர் பதினால்வரின் வேறாவர்; மாஇரு - ஒரு பொருட் பன்மொழி. 37 |