2912. ஆறினோடு ஆயிரம்
     அமைந்த ஆயிரம்
கூறின ஒரு படை;
     குறித்த அப் படை
ஏறின ஏழினது
     இரட்டி என்பரால்-
ஊறின சேனையின்
     தொகுதி உன்னுவார்.

    ஊறின சேனையின் தொகுதி உன்னுவார் - (வலிமையில்) ஊன்றிய
படையின் தொகையை எண்ணிக் கணக்கிடுபவர்; கூறின ஒரு படை - முன்
சொல்லிய சேனைகளுள் ஒரு சேனை; ஆறினோடு ஆயிரம் அமைந்த
ஆயிரம் -
அறுபது இலட்சமாகும்; குறித்த அப்படை - அவ்வாறு
கணக்கிடப்பட்ட அந்தப் படைகளின்; ஏழினது இரட்டி ஏறின - ஏழின்
இரு மடங்காகப் பெருக்கப்பட்ட பதினான்காகும்; என்பர் - என்று கூறுவர்.

     ஆல் : அசை ஆறினால் பெருக்கிய, ஆயிரத்தால் பெருக்கிய
ஆயிரம் எனக் கொள்க. அங்குப் போருக்கு வந்த படை ஒன்றுக்கு அறுபது
இலட்சம் கொண்ட பதினான்கு படைகள் இருந்தன என்பது.            38