2913. உரத்தினர்; உரும் என
     உரறும் வாயினர்;
கரத்து எறி படையினர்;
     கமலத்தோன் தரும்
வரத்தினர்; மலை என,
     மழை துயின்று எழு
சிரத்தினர்; தருக்கினர்;
     செருக்கும் சிந்தையார்.

     (அந்தச் சேனை வீரர்கள்) உரத்தினர் - மிக்க வலிமை
வாய்ந்தவர்கள்; உரும் என உரறும் வாயினர் - இடி போல முழங்கும்
பேச்சினையுடையவர்கள்; கரத்து எறி படையினர் - கைகளால்
வீசியெறியும் ஆயுதங்களையுடையவர்கள்; கமலத்தோன் தரும் வரத்தினர்-
தாமரைப் பூவில் தோன்றிய பிரமன் தந்த வரங்களைப் பெற்றவர்கள்;
மலை என, மழை துயின்று எழு சிரத்தினர் - மலைகளென்று எண்ணி
மேகங்கள் நீண்ட பொழுது தங்கிப் பின்பு எழுந்து சென்ற
தலையையுடையவர்கள்; தருக்கினர் - கருவம் மிக்கவர்கள்; செருக்கும்
சிந்தையார் -
போரில் பகைவரையழிக்கும் எண்ணங் கொண்டவர்கள்.

     மலையென மழைதுயின்றெழு சிரத்தினர் - மயக்க வணி உரறுதல் -
முழக்குதல். கரத்து - உருபுமயக்கம்.

     அரக்கரின் தலைவர்கள் மட்டுமல்லாமல், பொதுவாக அரக்கர் பலரும்
தவத்தால் வரம் பெற்றவர்கள் என்ற குறிப்பினைக் 'கமலத் தோன் தரும்
வரத்தினர்' என்ற தொடரால் புலப்படுத்துகிறார். செருத்தல் - அழித்தல்.
செருக்கதல் - எழுச்சியுறுதல்; உற்சாகம் என்றும் கொள்ளலாம்.         39