2914.விண் அளவிட நிமிர்ந்து
     உயர்ந்த மேனியர்;
கண் அளவிடல் அரு
     மார்பர்; காலினால்,
மண் அளவிடு நெடு
     வலத்தர்; வானவர்
எண் அளவிடல் அருஞ்
     செரு வென்று ஏறினார்.

    விண் அளவிட - ஆகாயத்தை அளந்து பார்க்கும்படி; நிமிர்ந்து
உயர்ந்த மேனியர் -
மிக ஓங்கி வளர்ந்த உடம்பையுடையவர்கள்; கண்
அளவிடல் அரு மார்பர் -
கண்களால் பார்த்து அளவிட்டுக் கூறமுடியாத
விரிந்த மார்பையுடையவர்கள்; காலினால் மண் அளவிடு - (தங்கள்)
கால்களால் பூமியை அளந்து பார்க்கக் கூடிய; நெடு வலத்தர் - மிகுந்த
வலிமையுடையவர்கள்; வானவர் - தேவர்களோடு நிகழ்ந்த; எண்
அளவிடல் அருஞ்செரு -
எண்ணால் கணக்கிட்டுச் சொல்ல முடியாத
போர்களில்; வென்று ஏறினார் - போர்களில் (அவர்களை) வெற்றி கண்டு
மேம்பட்டவர்கள்.

     எண் அளவிட - மனத்திலே கொண்டு மதிக்கும்படி. செருவரும் -
(இப்பொழுது) பெரும் போர் நேரும் என்று ஏறினார் - என்று எண்ணி
வீராவேசம் மிகப் பெற்றவர்கள் என்றும் உரை காணலாம். வலம் - பலம்,
வலிமை, வெற்றி.                                              40