2915. | இந்திரன் முதலினோர் எறிந்த மாப் படை சிந்தின தெறித்து உக, செறிந்த தோளினார்; அந்தகன், அடி தொழுது அடங்கும் ஆணையார்; வெந் தழல் உருவு கொண்டனைய மேனியார் |
இந்திரன் முதலினோர் - இந்திரன் முதலான தேவர்கள்; எறிந்த மாப்படை - (தம்மேல்) வீசித் தாக்கிய சிறந்த ஆயுதங்கள்; சிந்தின தெறித்து உக - (தம்மைச் சிறிதும் ஊறு படுத்தாமல்) தெறித்துச் சிதறிப் பொடியாகச் சிந்திப் போகும்படி; செறிந்த தோளினார் - வலிமை செறிந்த தோள்களை யுடையவர்கள்; அந்தகன் அடிதொழுது - (உயிர்களை வதைக்கும்) யமனும் தங்கள் பாதங்களில் வணங்கி; அடங்கும் ஆணையார் - அடங்கிப் பணியும்படி செய்யும் அதிகாரமுடையவர்கள்; வெந்தழல் - கொடிய நெருப்பே; உருவு கொண்டு அனைய மேனியார் - ஒரு வடிவெடுத்து வந்தாற்போன்ற வடிவம் உடையவர்கள். வெம் தழல் உருவு கொண்டனைய மேனியார்- தற்குறிப்பேற்றவணி. 41 |