2916. சூலமும், பாசமும், தொடர்ந்த
     செம் மயிர்ச்
சாலமும், தறுகணும்,
     எயிறும், தாங்கினார்;
'ஆலமும் வெளிது' எனும்
     நிறத்தர்; ஆற்றலால்,
காலனும், 'காலன்' என்று,
     அயிர்க்கும் காட்சியார்.

    சூலமும் - சூலாயுதத்தையும், பாசமும் - பாசம் என்னும்
ஆயுதத்தையும்; தொடர்ந்த செம்மயிர்ச் சாலமும் - அடர்ந்த சிவந்த
மயிர்த் திரளையும்; தறுகணும் - அஞ்சாமையையும்; எயிறும் - கோரப்
பற்களையும்; தாங்கினார் - கொண்டவர்கள்; ஆலமும் வெளிது எனும்
நிறத்தர் -
நஞ்சும் (தங்கள் நிறத்திற்கு முன்) வெண்மையானது என்று
சொல்லத்தக்கவாறு கரிய நிறத்தையுடையவர்கள்; ஆற்றலால் - (தமது)
வலிமையால்; காலனும் - யமனும்; காலன் என்று அயிர்க்கும் -
(தன்னையழிக்கும்) யமனோ என்று ஐயம் கொள்ளத்தக்க; காட்சியார் -
தோற்றமுடையவர்கள்.

     அரக்கரின் கருமை நிறத்தை விளக்க 'ஆலமும் வெளிதென்னும்
நிறத்தர்' என்றார். காலம் - திரள்.                               42