2917. கழலினர்; தாரினர்;
     கவச மார்பினர்;
நிழலுறு பூணினர்;
     நெறித்த நெற்றியர்;
அழலுரு குஞ்சியர்; அமரை
     வேட்டு, உவந்து,
எழலுறு மனத்தினர்;
     ஒருமை எய்தினார்.

    கழலினர் - (காலில்) வீரக் கழல் பூண்டவர்கள்; தாரினர் -
மாலையை யணிந்தவர்கள்; கவச மார்பினர் - கவசம் தரித்த
மார்பையுடையவர்கள்; நிழல் உறு பூணினர் - ஒளி மிகுந்த
ஆபரணங்களையுடையவர்கள்; நெறித்த நெற்றியர் - கோபத்தால் மேலே
நெறித்த நெற்றியையுடையவர்கள்; அழல் உறு குஞ்சியர் - நெருப்புப்
போன்று சிவந்து அடர்ந்த தலைமயிரை யுடையவர்கள்; அமரை வேட்டு -
போரினை விரும்பி; உவந்து எழல் உறு மனத்தினர் - உற்சாகங் கொண்டு
எழுகின்ற மனத்தையுடையவர்கள்; ஒருமை எய்தினார் - (தமக்குள்)
ஒற்றுமை பூண்டவர்கள்;

     அழல் உறு - உறு; உவமவுருபு ஒருமை எய்தினார் - ஒன்று கூடினர்
என்றும் போரில் ஒரே கருத்தைக் கொண்டனர் என்றும் கொள்ளலாம்.
நிழல் : ஒளி.

     'போர் எனில் புகலும் புனைகழல் மறவர்' எனப் போர் என்றாலே
விரும்புவோரும் வீரக்கழல் புனைந்தவரும் ஆகிய வீரரைப் புறநானூறு (31)
குறிப்பதை இப் பாடல் நினைவுறுத்துகிறது.                        43