2918.மருப்பு இறா மத களிற்று
     அமரர் மன்னனும்,
விருப்புறா, முகத்து எதிர்
     விழிக்கின், வெந்நிடும்;
உருப் பொறாது உலைவுறும்
     உலகம் மூன்றினும்
செருப் பெறாத் தினவுறு
     சிகரத் தோளினார்.

    இறா மருப்பு - (எளிதில்) ஒடியாத வலிய தந்தங்களையும்; மத
களிற்று -
மதத்தையுமுடைய ஐராவதமென்னும் யானையையுடைய; அமரர்
மன்னனும் -
தேவர்களுக்கு அரசனான இந்திரனும்; விருப் புறா முகத்து
எதிர் விழிக்கின் -
விருப்பமில்லாமல் தங்களுடைய முகத்துக்கு எதிரே
விழிக்க நேரிட்டாலும்; வெந் இடும் - (அப்போதே) அஞ்சி முதுகு காட்டி
ஓடுவான்; உருப் பொறாது - (அது வல்லாமலும்) பெற்றுள்ள உருவத்தைக்
கொண்டு நிற்க முடியாமல்; உலைவு உறும் - அழியும்படியான; உலகம்
மூன்றினும் -
சுவர்க்கம், பூமி, பாதாளம் என்னும் மூவுலகங்களிலும்; செருப்
பெறாத் தினவு உறு -
(தங்களை எதிர்ப்பவர் எவரும் இல்லாமையால்)
போரினைப் பெறாமல் தினவு கொண்ட; சிகரத் தோளினார் - மலைச்
சிகரம் போன்ற பருத்த தோள்களையுடையவர்கள்.

     இந்த அரக்க வீரர்களைப் போருக்கு எதிர்த்து வரும் நிலையில்லாமல்
மற்ற நேரங்களில் கண்ணால் பார்க்க நேர்ந்தாலும் அப்போதும் இந்திரனும்
இவர்கள் முன் நிற்கமாட்டாமல் அச்சத்தால் முதுகிட்டோடுவான் என்று
இவர்களின் வீரக் கடுமையை வலியுறுத்தினார்.

     வெந்நிடும் என்ற பயனிலைக்கு 'அமரர் மன்னனும்' என்பது எழுவாய்.
இறா மருப்பு என்றதால் அதன் வலிமை கூறியவாறு.                44