2919.'குஞ்சரம், குதிரை, பேய்,
     குரங்கு, கோள்அரி,
வெஞ் சினக் கரடி, நாய்,
     வேங்கை, யாளி' என்று,
அஞ்சுற, கனல் புரை
     முகத்தர்; ஆர்கலி
நஞ்சு தொக்கெனப்
     புரை நயனத்தார்களும்-

    குஞ்சரம் குதிரை - யானை, குதிரைகள்; பேய், குரங்கு - பேய்கள்,
குரங்குகள்; கோள் அரி - வலிய சிங்கம்; வெம் சினக் கரடி - கொடிய
கோபமுடைய கரடி; நாய், வேங்கை - நாய்கள், புலிகள்; யாளி என்று -
யாளிகள் என்னும் இவற்றின் முகவடிவங்களாக; அஞ்சுற - (காண்பவர்)
அஞ்சும்படி; கனல் புரை முகத்தர் - நெருப்பைப் போன்ற
முகத்தையுடையவர்களாகி; ஆர்கலி நஞ்சு தொக்கு எனப் புரை -
பாற்கடலில் தோன்றிய நஞ்சு திரண்டது போல விளங்கும்; நயனத்தார்கள்
-
கண்களையுடையவர்கள்;

     இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடராக இயைந்து முற்றுப்
பெறும். அந்த அரக்கர் யானை முதலாகப் பல கொடிய மிருகங்களின்
முகங்களையுடையவர்கள்; அன்னவரின் முகங்கள் கனல் போலவும்
கண்கள், ஆலகால நஞ்சு திரண்டு வந்தது போலவும் கொடுமை அமையப்
பெற்றன. ஆர்கலி நஞ்சு தொக்கென நயனம் : ஆர்கலி அரக்கர்களின்
உருவத்தினது கருமைக்கும் பெருமைக்கும் நஞ்சு அவர்களுடைய கண்களின்
கொடுமைக்கும் உவமைகள் ஆயின.

     ஆலகால நஞ்செலாம் கூடி வந்தது போன்ற கண்கள் என்றது,
அச்சுறுத்தலுக்கும் கொடுமைக்கும் உவமையாயிற்று. 'புரை உயர்பாகும் என்ற
நூற்பாவை நினைத்தால் நஞ்சு தொகுத்தது போலக் கொடுமையால் உயர்ந்த
நயனங்கள் எனப் பொருள் கொள்ளலாம்.                          45