2921. இயக்கரின் பறித்தன,
     அவுணர் இட்டன,
மயக்குறுத்து அமரரை
     வலியின் வாங்கின,
துயக்கு இல் கந்தர்ப்பரைத்
     துரந்து வாரின,
நயப்புறு சித்தரை
     நலிந்து வவ்வின,

    இயக்கரின் பறித்தன - (முன்பு நடந்த போரில்) யட்சர்களிடமிருந்து
வலியக் கவர்ந்தவையும்; அவுணர் இட்டன - அசுரர்கள்
(தோற்றோடும்போது) விட்டுச் சென்றவையும்; அமரரை மயக்குறுத்து -
தேவர்களை(ப் போரில்) மாயையால் மயங்கச் செய்து; வலியின் வாங்கின -
தம் வலிமையால் கவர்ந்து கொண்டவையும்; துயக்கு இல் கந்தர்ப்பரை -
சோர்வில்லாத வலிய கந்தர்வர்களை; துரந்து வாரின - துரத்தியோடச்
செய்து அவர்களிடமிருந்து வாரிக் கொண்டவையும்; நயப்புறு சித்தரை -
அன்பு மிகுந்த சித்தர்களை; நலிந்து வவ்வின - வருந்திக்
கவர்ந்தவையுமான-;

     இந்தச் செய்யுளால் அச் சேனையிற் கட்டியுள்ள கொடிகள்
இன்னின்ன வகையாய் வந்தன என்பதைக் கூறுகிறார்.

     அவுணர் என்பார் ஓர் அரக்க இனத்தவர். முரண்படும் தெய்வ
இனத்தவராயினும் தம் இனத்தவராகிய வேறுபட்டவராயினும் இலங்கை
அரக்கரின் கொடுமைக்கு இலக்காவர் என்பது இப்பாடலின் குறிப்பு. நயப்புறு
சித்தர் என்பதால் எவருடைய அன்புக்கும் உரியவர் அவர் என்பது தெளிவு.
ஆயினும் இலங்கை அரக்கர் அவர்களிடமும் அன்பு பாராட்ட மாட்டார்கள்
என்பது உணர்த்தப்பட்டது. இச் செய்யுள் அடுத்த செய்யுளுடன் (2922)
இயைந்து வினை முடிவு கொள்ளும்.                             47