2922.கொடி, தழை, கவிகை,
     வான் தொங்கல், குஞ்சரம்
படியுறு பதாகை, மீ
     விதானம், பல் மணி
இடையிலாது எங்கணும்
     இசைய மீமிசை
மிடைதலின், உலகு எலாம்
     வெயில் இழக்கவே.

    கொடி - துகிற்கொடிகளும்; தழை - மயிற்பீலிகளும்; கவிகை -
குடைகளும்; வான் தொங்கல் - உயர்ந்த குஞ்சங்களும்; குஞ்சரம் படியுறு
பதாகை -
யானைகளின் மேல் பொருந்திய பெரிய கொடிகளும்; மீ
விதானம் -
மேற்கட்டிகளும்; பல் மணி இடையிலாது - பல வகை
இரத்தினங்களும் இடைவெளியில்லாமல்; எங்கணும் இசைய - எல்லா
இடத்தும் பொருந்த; மீமிசை மிடைதலின் - வானத்தில் நெருங்குவதால்;
உலகு எலாம் வெயில் இழக்கவே - உலகங்களெல்லாம் சூரியனொளியை
இழந்தன.

     கொடி முதலியன உலகு முழுவதும் வெயில் புகாதபடி மறைத்து
இருளைச் செய்தன என்பது தொடர்புயர்வு நவிற்சியணி.

     தொங்கல்; குஞ்சம்; ஆகுபெயர்கள்.                         48