பெருந் தானையோடு கரன் இராமன் உறைவிடம் சேர்தல்

2923. எழுவரோடு எழுவர் ஆம்,
     உலகம் ஏழொடு ஏழ்
தழுவிய வென்றியர்,
     தலைவர்; தானையர்:-
மழுவினர், வாளினர்;
     வயங்கு சூலத்தர்;
உழுவையோடு அரி என
     உடற்றும் சீற்றத்தார்;

    எழுவரோடு எழுவர் ஆம் தலைவர் - பதினால்வராகிய அந்தச்
சேனைத் தலைவர்கள்; உலகம் ஏழொடு ஏழ் தழுவிய வென்றியர் -
பதினான்கு உலகங்களிலும் பொருந்திய வெற்றியையுடையவர்கள்; தானையர்
-
பெரும்படையுடையவர்கள்; மழுவினர் - மழுவையுடையவர்கள்;
வாளினர் - வாளைத் தாங்கியவர்கள்; வயங்கு சூலத்தர் - விளங்கும்
சூலத்தையுடையவர்கள்; உழுவையோடு அரி என - புலியும் சிங்கமும்
போல; உடற்றும் சீற்றத்தார் - (பிறவுயிரை) வருத்தும் சினமுடையவர்கள்.

     இங்குக் கூறப்பெற்ற பதினான்கு தானைத் தலைவர் வேறு; முன்பு
போரில் மடிந்தவர் வேறு;                                      49