2924.வில்லினர்; வாளினர்; இதழின்
     மீது இடும்
பல்லினர்; மேருவைப்
     பறிக்கும் ஆற்றலர்;
புல்லினர் திசைதொறும்;
     புரவித் தேரினர்;
சொல்லின முடிக்குறும்
     துணிவின் நெஞ்சினர்.

    வில்லினர் - வில்லையுடையவர்களும்; வாளினர் - உடை
வாளையுடையவர்களும்; இதழின் மீது இடும் பல்லினர் - உதடுகளின்
மேல் வைத்து ஊன்றும் பற்களையுடையவர்களும்; மேருவை பறிக்கும்
ஆற்றலர் -
மகா மேருமலையையும் பறித்தெடுக்கக் கூடிய
வல்லமையுடையவர்களும்; புரவித் தேரினர் - குதிரைகள் பூட்டப் பெற்ற
தேரினையுடையவர்கள்; சொல்லின முடிக்குறும் - (தாம்)
சொல்லியவற்றைச் சொன்னவாறே செய்து முடிக்கவல்ல; துணிவின்
நெஞ்சினர் -
வலிமையுள்ள மனமுடையவர்களுமான அவர்கள்; திசை
தொறும் புல்லினர் -
எல்லாத் திக்குகளிலும் வந்து சூழ்ந்து நின்றார்கள்.

     இதழின் மிதிடும் பல்லினர் என்பது சினத்தின் மெய்ப்பாடு.       50