2925. | தூடணன், திரிசிராத் தோன்றல், ஆதியர், கோடணை முரசினம் குளிறு சேனையர், ஆடவர் உயிர் கவர் அலங்கல் வேலினர், பாடவ நிலையினர், பலரும் சுற்றினர். |
ஆடவர் உயிர் கவர் - வீரர்களின் உயிரை (உடம்பிலிருந்து) எடுக்கவல்ல; அலங்கல் வேலினர் - வெற்றி மாலை சூடிய; பாடவ நிலையினர் - திறமை வாய்ந்த நிலையுடையவர்களுமாகிய; தூடணன் - தூடணன்; திரிசிராத் தோன்றல் - திரிசிரசு என்னும் வீரன்; ஆதியர் - முதலிய தலைவர்களை முன்னிட்டவரான; பலரும் - சேனைத் தலைவர் பலரும்; கோடணை முரசு இனம் குளிறு சேனையர் - ஆரவாரத்தையுடைய பேரிகை வாத்தியங்கள் முழங்குகின்ற சேனைகளையுடையவர்களாய்; சுற்றினர் - (கரனை) வந்து சூழ்ந்தார்கள். தூடணன் முதலான பெருஞ் சேனைத் தலைவர்கள் தங்கள் சேனையோடு வந்து கரனுக்கு உதவுவதற்காகக் கரனைச் சூழ்ந்து கொண்டார்கள் என்பது செய்தி. தூடணன் - யாவரையும் நிந்திப்பவன்; திரிசிரா மூன்று தலைகளையுடையவன்; வடமொழிப் பெயர்கள். தோன்றல் - ஆண்மையில் சிறந்தவன்; கோடணை - கோஷணம்; ஆரவாரம்; பாடவம் - திறமை; குளிறுதல் - பேரொலி செய்தல். 51 |