2926. ஆன்று அமை எறி
     படை அழுவத்து ஆர்கலி.
வான் தொடர் மேருவை
     வளைத்ததாம் என,
ஊன்றின தேரினன்,
     உயர்ந்த தோளினன்,
தோன்றினன் யாவரும்
     துணுக்கம் எய்தவே.

    ஆன்று அமை - நிறைந்து விளங்கிய; எறிபடை - பகைவர்களைத்
தாக்கவல்ல சேனைகளாகிய; அழுவத்து ஆர்கலி - மிக்க பரப்பையுடைய
கடல்; வான் தொடர் மேருவை - ஆகாயத்தையளாவிய மேருமலையை;
வளைத்ததாம் என - வளைத்துக் கொண்டது போல; ஊன்றின தேரினன்-
(தன்னைச் சூழ நடுவில்) நிலை நிறுத்திய தன் தேரையுடையவனும்;
உயர்ந்த தோளினன் - உயர்ந்த தோள்களையுடையவனுமாய்; யாவரும்
துணுக்கம் எய்த -
எல்லோரும் அஞ்சி நடுங்கும்படி; தோன்றினன் -
போர்க்களத்திலே (கரன்) வந்து தோன்றினான்.

     கடல், மேருவை வளைத்தது போலத் தூடணன் முதலிய அரக்கச்
சேனையர் கரனைச் சூழ நின்றனர். மேரு கரனுக்கு உவமை; உருவகத்தை
அங்கமாகக் கொண்டு வந்த உவமையணி.                           52