2927. | அசும்புறு மத கரி, புரவி, ஆடகத் தசும்புறு சயந்தனம், அரக்கர் தாள், தர, விசும்புறு தூளியால், வெண்மை மேயின- பசும் பரி, பகலவன், பைம் பொன் தேர் அரோ. |
அசும்பு உறு மதகரி - நீரூற்றைப் போன்று (இடைவிடாது) பெருகுகின்ற மதநீரையுடைய யானைகளும்; புரவி - குதிரைகளும்; ஆடகத் தசும்பு உறு சயந்தனம் - பொன்னாலான கலசத்தையுடைய தேர்களும்; அரக்கர் தாள் தர - அரக்கர்களும் (ஆகிய நால்வகைச் சேனைகளும்) கால்களை வைத்து நடந்தமையால்; விசும்பு உறு தூளியால் - (மேலெழுந்து) வானத்தில் போய்ப் படிந்த புழுதிகளால்; பகலவன் - சூரியனுடைய; பசும் பரி - (தேரில் பூண்ட) பச்சைக் குதிரைகளும்; பைம்பொன் தேர் - பசும் பொன்னிறமான தேரும்; வெண்மை மேயின - வெண்ணிறத்தை யடைந்தன; அரோ - ஈற்றசை. நால்வகைச் சேனைகள் எழுப்பிய வெண் புழுதி மிகப் படிவதால் கதிரவனின் பசும் பொன் தேரும், அதில் பூட்டப் பெற்ற பச்சைக் குதிரைகளும் வெண்ணிறமடைந்தன என்பது. இதனால் மேலெழுந்த புழுதியின் மிகுதி தொனிக்கும். அசும்பு - ஊற்று. சூரியனின் தேர்க் குதிரைகள் ஏழு; அவை பசுமை நிறமுடையவை. 53 |