2928. | வனம் துகள்பட்டன, மலையின் வான் உயர் கனம் துகள்பட்டன; கடல்கள் தூர்ந்தன, இனம் தொகு தூளியால்; இசைப்பது என் இனி?- சினம் தொகு நெடுங் கடற் சேனை செல்லவே. |
சினம் தொகு - கோபம் மிக்க; நெடுங் கடல் சேனை - பெரிய கடல் போன்ற அந்த அரக்கர் சேனைகள்; செல்ல - புறப்பட்டபோது; இனம் தொகு தூளியால் - கூட்டமாகத் திரண்டெழுந்த தூசியால்; வனம் துகள் பட்டன- காடுகளெங்கும் புழுதி படிந்தன; வான் உயர் மலையின்- வானோங்கி யுயர்ந்த மலைகளின் மேல்; கனம் துகள் பட்டன- படிந்திருந்த மேகங்களும் அத் தூசியால் மூடப்பட்டன; கடல்கள் தூர்ந்தன - கடல்களும் தூர்ந்துபோயின; இனி இசைப்பது என்? - இனிச் சொல்ல வேண்டுவது என்ன உள்ளது?; ஏ - ஈற்றசை. சேனைகள் எழுப்பிய புழுதி வனம் முழுதும் தூளிமயமாக்கியதுமல்லாமல் வானத்து மேகங்களையும் தூளியாக்கியது; கடலிலும் நிரம்பித் தூர்த்தது. தொடர்புயர்வு நவிற்சியணி. சேனையைக் கடல் என்றது அதன் மிகுதிநோக்கி. 54 |