2929. | நிலமிசை, விசும்பிடை, நெருக்கலால், நெடு மலைமிசை மலைஇனம் வருவபோல், மலைத் தலைமிசை, தலைமிசை, தாவிச் சென்றனர்- கொலைமிசை நஞ்சு எனக் கொதிக்கும் நெஞ்சினார். |
நிலமிசை - தரையின் மீதும்; விசும்பு இடை - ஆகாயத்தின் மேலும்; நெருக்கலால் - (இடைவெளியில்லாமல்) நெருக்க முண்டானதால்; கொலை மிசை நஞ்சு என - போரில் கொல்லுதலை மேற்கொண்டு விடத்தைப் போன்று; கொதிக்கும் நெஞ்சினார் - கொதிக்கின்ற மனமுடைய கொடிய அரக்கர்; நெடு மலைமிசை - உயர்ந்த மலைகளின் மேல்; மலை இனம் வருவபோல் - வேறு மலைக் கூட்டங்கள் ஏறி வருவன போல; மலைத் தலைமிசைத் தலைமிசை - மலைகளின் சிகரங்கள் தோறும்; தாவிச் சென்றனர் - (கால் வைத்துத்) தாண்டிக் கொண்டு சென்றார்கள். பூமியிலும் வானத்திலும் சேனைகள் நெருங்கி வெற்றிடமில்லாமல் ஆக்கியதால் பல அரக்கர்கள் மலைகளின் மேலே பாய்ந்து நடந்து போயினர் என்பது அவர்களுக்கு மலை மேல் மலை வருவதை இல்பொருள் உவமையாகக் கூறினார். வருவ; பெயர். 55 |