அறுசீர் ஆசிரிய விருத்தம்

2930. வந்தது சேனை வெள்ளம்,
     வள்ளியோன் மருங்கு-மாயா-
பந்த மா வினையம் மாளப்
     பற்று அறு பெற்றியோர்க்கும்
உந்த அரு நிலையது ஆகி,
     உடன் உறைந்து உயிர்கள்தம்மை
அந்தகற்கு அளிக்கும் நோய்போல்,
     அரக்கி முன் ஆக அம்மா!

     மாயா - அழியாத; பந்த மா வினையம் மாள - பிணிப்பாகிய
பெரிய கருமங்களையழிக்கும்படி; பற்று அறு - உலகப் பற்று நீங்கிய;
பெற்றியோர்க்கும் - உயர்ந்த ஞானியர்களுக்கும்; உந்த அரு நிலையது
ஆகி -
விலக்க முடியாத நிலையுடையதாய்; உடன் உறைந்து -
உடம்போடு பொருந்தியிருந்து; உயிர்கள் தம்மை - எல்லா உயிர்களையும்;
அந்தகற்கு அளிக்கும் - யமனுக்குக் கொடுக்கின்ற (கொன்றொழிக்கின்ற) ;
நோய் போல் - வியாதி போல; அரக்கி முன்னாக - அரக்கியான
சூர்ப்பணகை முன்னே செல்ல; சேனை வெள்ளம் - அந்த இராக்கதச்
சேனைப் பெருக்கு; வள்ளியோன் மருங்கு - வள்ளலாகிய இராமபிரான்
அருகே; வந்தது - வந்து சேர்ந்தது.

     அம்மா; ஈற்றசை, வியப்பிடைச் சொல்லும் ஆம். சூர்ப்பணகை,
தன்னோடு பிறந்த கரன் முதலிய அரக்கர்களுக்கும் இது காரணமாக
இராவணன் முதலோர்க்கும் அழிவுக்குக் காரணமாய் இருந்தாளாதலால்
அவளுக்கு உயிர்களை யமனுக்கு அளிக்கும் நோய் உவமையாயிற்று.
அரக்கர்கள் உயிர்களுக்கும், சூர்ப்பணகை நோய்க்கும், இராமபிரான்
யமனுக்கும் உவமைகள்.

     பந்தமா வினை - உயிரைக் கட்டுப்படுத்தும் பெரிய கருமம்.     56