2931. | தூரியக் குரலின், வானின் முகிற் கணம் துணுக்கம்கொள்ள; வார் சிலை ஒலியின், அஞ்சி, உரும் எலாம், மறுக்கம்கொள்ள; ஆர்கலி, ஆர்ப்பின், உட்கி அசைவுற; அரக்கர் சேனை, போர் வனத்து இருந்த வீரர் உறைவிடம் புக்கது அன்றே. |
தூரியக் குரலின் - வாத்தியங்களின் முழக்கத்தால்; வானின் முகிற் கணம் - ஆகாயத்திலுள்ள மேகக் கூட்டங்கள்; துணுக்கம் கொள்ள - அஞ்சி நடுக்கம் அடையவும்; வார்சிலை ஒலியின் - நீண்ட விற்களின் நாணொலியால்; உரும் எலாம் அஞ்சி - இடிகளெல்லாம் பயந்து; மறுக்கம் கொள்ள - கலக்கமடையவும்; ஆர்ப்பின் - (கர்ச்சனை முதலிய) ஆரவாரத்தால்; ஆர்கலி உட்கி அசைவு உற - கடல்களும் அஞ்சி நடுக்கமுறவும்; அரக்கர்சேனை - இராக்கதச் சேனை; அன்றே - அப்பொழுதே; _ வனத்து இருந்த போர் வீரர் உறைவிடம் - அந்தக் காட்டில் தங்கியிருந்த போரில் வல்ல வீரர்களான (இராமலக்குவர்) வசிக்கும் இடத்தை; புக்கது - போய் அடைந்தது. தூரியங்களாகிய வாத்தியங்களின் ஒலியும் சிலையின் நாணொலியும் மிகுந்து தோன்ற அரக்கச் சேனை ஆரவாரம் செய்து கொண்டு இராமலக்குவர் இருந்த இடத்தைச் சென்றடைந்தது என்பது, - தொடர்புயர்வு நவிற்சியணி. அன்று, ஏ - அசையுமாம். சேனை முழக்கத்திற்கு மேகம், கடல் இவற்றின் முழக்கங்கள் உவமையாம். 57 |